என்னை மறைக்கவும்

அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்பு

அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்பு என்பதில் பொதுவாக, கர்ப்பத்தைக் கலைக்க iலேசான மயக்க நிலையில் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

முதல் படி என்ன?

நீங்கள் ஒரு மருத்துவ நிலையச் சந்திப்புக்கு வருவதற்கு முன், நீங்கள் எத்தனை வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதையும், உங்களுக்கு எவ்வாறான சேவயை அந்த மருத்துவ நிலையத்தால் வழங்க முடியும் என்பதையும் அறிந்துகொள்வது முக்கியமானதாகும். நீங்கள் எவ்வளவு காலம் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றால், நீங்கள் ஒரு அல்ட்ராசவுண்ட் (ultrasound) பரிசோதனையைச் செய்துகொள்ளவேண்டி இருக்கலாம்.

நீங்கள் எத்தனை வாரங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கவே அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்படுகிறது. அறுவைசிகிச்சை ஊடாகக் கருக்கலைப்பு செய்வதற்கு முன், நீங்கள் கர்ப்பமாகி ஆறு முதல் ஏழு வாரங்கள் வரை காத்திருப்பது பொதுவாகச் சிறந்தது. இதற்கு முன்னதாகவே செய்தால், கருக்கலைப்பு செய்யப்படாமல்போக அதிக வாய்ப்புள்ளது.

இதில் என்ன நடக்கும்?

உங்களுக்கு தளர்வையும் தூக்கத்தையும் உண்டாக்கும் இலேசான மயக்கமருந்தைக் கொடுப்பதன் மூலம், அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்பு பொதுவாகச் செய்யப்படுகிறது. செயல்முறையின் போது உங்களை முடிந்தவரை வசதியாக உணர வைப்பதற்காக மயக்கமருந்து பயன்படுத்தப்படுகிறது.

கருப்பையின் புறணி மற்றும் கருப்பைக்குள் இருப்பவற்றை கருக்கலைப்பு நீக்கிவிடுகிறது. ஒரு சிறிய, பிளாஸ்டிக் குழாயை கருப்பைக்கு உள்ளே விட்டு மெதுவாக உறிஞ்சுவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது. ஒரு அனுபம் மிக்க மருத்துவரால் செய்யப்படும்போது, இது ஒரு பாதுகாப்பான, எளிய மற்றும் ஆபத்து குறைவான செயல்முறையாகும்.

இந்தச் செயல்முறைக்கு சுமார் 15 நிமிடங்கள் எடுக்கும், ஆனால் மயக்க மருந்தின் வீரியம் தணிந்து, உங்களால் வீட்டிற்குப் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு சுமார் நான்கு மணி நேரம் நீங்கள் மருத்துவமனையில் அல்லது மருத்துவ நிலையத்தில் இருக்க வேண்டும்.

கர்ப்பம் தரித்து 16 வாரங்களுக்குப் பிறகு வேறு ஒரு செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை பெரும்பாலும் சிக்கலானதாக இருக்கிறது, அத்துடன் இது அணுகுவதற்குக் கடினமாகவும் இருக்கலாம். அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்புக்கான செலவானது பொதுவாக நீங்கள் எவ்வளவு காலமாக கர்ப்பமாக இருக்கிறீர்களோ அதைப் பொறுத்து அதிகரிக்கிறது.

நான் எங்கே அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்பைச் செய்து கொள்ளலாம்?

அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்பானது, தனியார் அல்லது சமூக அடிப்படையிலான மருத்துவமனைகள் மற்றும் அவ்வப்போது பொது மருத்துவமனைகள் மூலம் என்.எஸ்.டபிள்யூ (NSW)-இல் செய்யப்படுகிறது. என்.எஸ்.டபிள்யூ (NSW)-இல், ஒரு மருத்துவ நிலையத்திற்குச் செல்ல ஒரு மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை, அதாவது நீங்கள் ஒரு சந்திப்பிற்காக மருத்துவ நிலையத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். சில மருத்துவ நிலையங்கள், கர்ப்பம் தரித்து 12 வாரங்கள் வரை மட்டுமே அறுவைசிகிச்சைக் கருக்கலைப்புகளைச் செய்கின்றன, அதே நேரத்தில் பிற மருத்துவ நிலையங்கள் கர்ப்பம் தரித்து 20 வாரங்கள் வரை கருக்கலைப்புகளைச் செய்கின்றன.

அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்பு ஒன்றிற்கு நான் முன்பதிவு செய்வது எப்படி?

நீங்கள் அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்பைப் பரிசீலித்தால் அல்லது அறுவைசிகிச்சை மூலமான கருக்கலைப்பை நீங்கள் எங்கு செய்துகொள்ளலாம் என்பதைக் கண்டறிய விரும்பினால், 1800 008 463 என்ற ‘பிரகனன்சி சாய்சஸ்’ உதவி இணைப்பை அழைக்கவும்.