என்னை மறைக்கவும்

தத்தெடுப்பு மற்றும் வளர்ப்புப் பராமரிப்பு

நீங்கள் கர்ப்பத்தைத் தொடர்வதையும், குழந்தையை வேறு யாரேனும் கவனித்துக் கொள்வதையும் தேர்ந்தெடுத்தால், தத்தெடுப்பு மற்றும் வளர்ப்புப் பராமரிப்பு ஆகியவை உள்ளன.

தத்தெடுப்பு

தத்தெடுப்பு என்றால் தத்தெடுக்கும் பெற்றோருக்கு நீங்கள் பெற்றோராக இருப்பதற்கான உரிமைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் வழங்குவதாகும்.

ஒரு குழந்தையின் சட்டப்பூர்வப் பாதுகாவலராக வேறொருவர் ஆவதற்காக, ஒரு சட்டப்பூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தத்தெடுப்புடன் சம்பந்தப்பட்ட விடயம் ஆகும். சட்டபூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு, குழந்தை பிறந்து குறைந்தது 30 நாட்கள் வரை பெற்றோர்கள் காத்திருக்க வேண்டும்.

நீங்கள் தத்தெடுப்பைத் தேர்ந்தெடுத்தால், தத்தெடுப்பு பெற்றோருடன் ஒரு தத்தெடுப்புத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்வதன் மூலம், குழந்தையுடன் நீங்கள் தொடர்பில் இருக்கலாம். இந்த திட்டத்தை உருவாக்க ஒரு வழக்கு அலுவலரால் (caseworker) உதவ முடியும். ‘சமூகங்கள் மற்றும் நீதி’ (Communities and Justice) என்பது என்.எஸ்.டபிள்யு (NSW)-இல் தத்தெடுப்பு சேவைகளைக் கவனிக்கும் ஒரு அரசு நிறுவனமாகும். தத்துக்கொடுக்கும் குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோருடனும் தத்தெடுக்க விரும்பும் குடும்பங்களுடனும் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.

தத்தெடுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தாங்கள் பிறந்த குடும்பம் மற்றும் தங்களுடைய கலாச்சாரம் பற்றித் தெரிந்துகொள்ள சட்ட ரீதியான உரிமை உள்ளது. எவ்வாறு தொடர்பு பேணப்படும் என்று சம்மதத்துடன் அளிக்கப்பட்ட விவரங்களை விவரிக்கும் ஒரு தத்தெடுப்புத் திட்டத்தை உருவாக்க, தத்தெடுப்பு வழக்கு அலுவலர் (caseworker) ஒருவர் தத்தெடுக்கும் பெற்றோருடன் இணைந்து பணியாற்றுவார்.

ஒரு குழந்தைக்குப் பெற்றோராக உங்களால் இருக்க முடியாது என்று நீங்கள் உணர்ந்தால், தத்துக்கொடுப்பது மட்டுமே உங்களுக்கான ஒரே மாற்று வழியல்ல. வளர்ப்புப் பராமரிப்பு என்பதும் ஒரு விருப்பத்தெரிவாக இருக்கலாம்.

வளர்ப்புப் பராமரிப்பு

உங்கள் குழந்தை மற்றொரு குடும்பத்தினரால் வளர்க்கப்படுவதே வளர்ப்புப் பராமரிப்பாகும்.

பல்வேறு வகையான வளர்ப்புப் பராமரிப்புகள் உள்ளன. வளர்ப்புப் பராமரிப்பு விருப்பங்கள் பின்வருமாறு:

  • தற்காலிக வளர்ப்புப் பராமரிப்பு: உங்களுடைய தங்குமிட, நிதி அல்லது தனிப்பட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு நீங்கள் தீர்வுகாணும் வேளையில் இதைப் பயன்படுத்தலாம். தன்னார்வப் பராமரிப்பின் போது (நீதிமன்ற உத்தரவு இல்லாமல்), நீங்கள் தொடர்ந்தும் அந்தக் குழந்தையின் பாதுகாவலராக இருப்பீர்கள், அத்துடன் உங்கள் குழந்தையை நீங்கள் பார்க்கலாம். தற்காலிகப் பராமரிப்பானது பொதுவாக பல வாரங்களுக்கு மட்டுமாக வரையறுக்கப்படுகிறது
  • நீண்ட கால வளர்ப்புப் பராமரிப்பு: உங்கள் பிள்ளை நீண்ட கால வளர்ப்புப் பராமரிப்பில் இருந்தால், நீங்கள் உங்கள் குழந்தையின் சட்டபூர்வ பாதுகாவலர் தகுதியையும் மற்றும்/அல்லது உங்கள் குழந்தையின் பராமரிப்புப் பொறுப்பையும் இழப்பீர்கள். நீங்கள் தொடர்ந்தும் குழந்தையின் சட்டப்பூர்வமான பெற்றோராகவே இருப்பீர்கள். நீண்ட கால வளர்ப்புப் பராமரிப்பில், குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் வளர்ப்புக் குடும்பத்துடன் உணர்வுபூர்வமாக ஒட்டிக்கொள்கிறார்கள்

தத்தெடுப்பு/வளர்ப்புப் பராமரிப்பு பற்றிய தகவல்கள்

சமூகங்கள் மற்றும் நீதிக்கான திணைக்களமானது (Department of Communities and Justice - DCJ) பல்வேறு தத்தெடுப்பு மற்றும் வளர்ப்புப் பராமரிப்புச் சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஒரு தகுதிவாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளருடன் உங்கள் குழந்தையின் பராமரிப்புக்கான உங்கள் விருப்பங்களைப் பற்றி பேசலாம். DCJ தத்தெடுப்பு சேவைகளை (DCJ Adoption Services) 1800 003 227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தத்தெடுப்பு செயல்முறை மற்றும் மாற்று வழிமுறைகளைப் பற்றிய மேலும் தகவல்களை https://www.facs.nsw.gov.au/families/adoption என்ற DCJ இணையதளத்தில் காணலாம்.